Friday, January 29, 2016

மகரந்தங்களின் வசந்தகாலம்....







மகரந்தங்களின் 
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !

இசையின் சிகரங்களில் 
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !

விண் காணும் தளிர்கள் 
மண் நோக்கி ....
சருகுகள் !


தியாக ஒளி பரப்பி 
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !

..........கா.ந.கல்யாணசுந்தரம் 

Tuesday, September 1, 2015

முதல் கைவினைப்பொருள் ...

தேசத்தின்
முதல் கைவினைப்பொருள் ...
தூக்கனான் குருவிக்கூடுகள் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.

நிழல்கள்

இரவின் மடியில் உறங்கும்
பகலவனின் பிள்ளைகள் ...
நிழல்கள் !
............கா.ந.கல்யாணசுந்தரம்

Tuesday, February 5, 2013

மழலைகளின் கையசைப்பில்

 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!



........கா.ந.கல்யாணசுந்தரம்

Wednesday, December 5, 2012

நதிக்கரைக்கு மட்டும் !










நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஊர்வலத்தின் உன்னதம்!







*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்