Sunday, May 29, 2016

ஞான மரபில் ....

ஆயிரக் கணக்கில் 
அவல காட்சிகள் ...
மூடிய இமைக்குள் !


இதயம் கனத்து 
இடம்பெயர்ந்தது ...
பிரிவின் வலி ...!


தோளில் அமர 
துடித்தன சுமைகள்... 
இலகுவாய் !


நெற்றியில் உதிரும் 
வியர்வைத் துளியில்... 
உழைப்பின் வாடை !


வெற்றியின் படிகளை 
அடையாளம் கண்டன ...
தோல்வியின் கால்கள் !


மனித மனத்தின்
பெரும் பயணம்
ஞானமரபுகளைத் தேடி

நுண் அணுக்களின்
கூட்டுப் பொருட்கள்
பிரபஞ்சம்

ஆன்மீகத் தேடலில்
மூன்று வழித்தடங்கள்
பக்தி ஞானம் தியானம்

செயல்களின் வடிவம்
பிறப்பெடுக்கிறது...
நாம் யார் எனும் சிந்தனைகளில் !


குற்றமற்ற கலாச்சாரத்தில்
பதுங்கியுள்ளது
அறிவியல் வாழ்க்கை !


நவீன தகவல் தொடர்புகள்
அடையாளம் காட்டுகின்றன...
கலாச்சார சீரழிவுப் பாதைகளை !


இலக்கண இலக்கியங்களின்
பாரம்பரியத்தில் தோன்றியது...
தமிழ்மொழிக் குடும்பம் !


இன்றைய சோர்வை விலக்கும் 
திறனிருந்தால்...
நாளைய மலர்தல் நமக்காகவே !


அடக்கமெனும் அணிகலன்
அணிந்தவர்கள்...
அறத்தின் காவலர்கள் !


நற்செயல் நடப்பதெல்லாம்
நல்லோர்கள் முடிவெடுக்கும்
இறைத்தன்மை !


பயணத் திசைகளின்
வெற்றி இலக்குகள் 
நம்மிடமே !


இழப்பதற்கு ஒன்றுமில்லை
கொண்டுவந்தது
ஏதுமில்லை என்பதால் !


மனவமைதிப் பூங்காவில்
இடையிடையே ...
உறவுப் பாலங்கள் !


சொற்பகாலங்களின் 
வாழ்வுரிமை ...
குழப்பவாதிகளின் குதூகலம் !


மன இறுக்கத்தில் 
மேடைபோட்டு அமர்ந்துவிடுகிறது ...
இறுமாப்பும் கர்வமும் !


தன்னிலை மறந்தோர்கள்
முன்னிலை வகித்தாலும்
தழைக்காது தர்மவாழ்வு !


.....கா.ந.கல்யாணசுந்தரம் 




No comments: