Wednesday, December 5, 2012

நதிக்கரைக்கு மட்டும் !










நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஊர்வலத்தின் உன்னதம்!







*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்

Wednesday, November 28, 2012

ஒரு புதுக்கவிதையாய்









ஒரு புதுக்கவிதையாய் 
காலைப்பனி மேய்கின்ற... 
கிராமத்து களத்துமேடு!

ஒற்றைக்காலில் நின்றபடி 
வயிற்றுப் பசிக்கான தவம் 
ஆற்றுப்படுகை கொக்குகள் !

இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும் 
தென்னை ஓலைகள் !

எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்.... 
இரைதேடும் பறவைகள்!

அன்றலர்ந்த மலர்களை 
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

Thursday, September 20, 2012

என்ன தவம் செய்தோம்




என்ன தவம் செய்தோம் 
ஏணிப்படிகளாவதற்கு...
பெருமிதத்தில்  மூங்கில்கள் !
 
 
...........கா.ந கல்யாணசுந்தரம் 

பிரிந்து செல்லும் பாதைகள்

 
 
 
 
 
 
 
 
 
 
பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

Friday, April 13, 2012

அற்புத சிலையின்.....





கல்லுடன் உளி

உறவாடியது....

அற்புத சிலையின் பிறப்பு!

.............கா.ந.கல்யாணசுந்தரம்