Wednesday, December 5, 2012

நதிக்கரைக்கு மட்டும் !










நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஊர்வலத்தின் உன்னதம்!







*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்